COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

சிறியா நங்கை

 சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும்.


செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்


ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு.


விஷக்கடிக்கு மருந்து


சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது.


நீரிழிவு நோய்க்கு மருந்து


இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள்.


கல்லீரல் நோய்களை போக்கும்


காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. 

 
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு   சிறியா நங்கையை  சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகளைக் குணப்படுத்தும்.

எட்டிமரம்

தெய்வீக மூலிகைகளில் ஒன்றான எட்டிமரம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். இதன் வேர்க்காம்பு, பட்டை விஷத்தன்மை உடையது. எனவே இதனை கவனத்துடன் கையாள வேண்டும். எட்டி மரம் தென்கிழக்கு ஆசியாவினைச் சார்ந்தது. இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் பரவி காணப்படுகிறது.

எட்டி மரத்தின் இலைகள், விதைகள், பட்டை, வேர்கட்டை, ஆகிய பகுதிகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எட்டி மரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும். நக்சுவாமிகா என்னும் விஷ முறிவு மருந்தாக செயல்படுகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

நக்சுவாமிகாவின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பவை மூன்று ஆல்கலாய்டுகள்: சிட்ரக்னைன், புருனைன், வாமிசைன். இவற்றுள் முதல் ஆல்கலாய்டுதான் பெரும் பங்கு வகிக்கிறது.

முகவாதம் போக்கும்

இந்திய மருத்துவத்தில் அபின், மிளகுடன் சம அளவில் மாத்திரையாக செய்யப்பட்டு வெற்றிலைச் சாறுடன் நரம்பு மண்டல நோய்களுக்கு மருந்தாகிறது. சீன மருத்துவத்தில் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்டக் களிம்பு, முக முடக்குவாத நோயான, பெல்முடக்கு வாதத்தினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இது வாய்வை அகற்றும், வெப்பத்தை உண்டாக்கும். நரம்பு மண்டலத்தை இயக்கும் வயிற்றுவலி வாந்தி, குடல் எரிச்சல், வயிற்றுவலி , போன்றவற்றை குணப்படுத்தும். தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணறல் போன்றவற்றைக் குணப் படுத்தும்.

விஷ முறிவாகும் எட்டி விதை

இதன் இலைகளை அரைத்து நாள்பட்ட உரியும் காயங்கள் மற்றும் புண்களுக்கு பற்று போடப்படுகிறது. விதை மருந்து நக்சுவாமிகா எனப்படுகிறது. இது பலவிதமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு, சீதபேதி, வலிப்பு நோய், காய்ச்சல், நீரிழிவு, காலரா, கால், கை, வலிப்பு மூட்டுவலி, நரம்பு மண்டல நோய்கள், நாய்க்கடி, தூக்கமின்மை, முடக்குவாதம், ஆண்மலடு, வாந்தி, ஆல்கஹால் நோய், அபின்நச்சு, ஆகியவற்றில் மிகக்குறைந்த அளவில் மருந்தாகப் பயன்படுகிறது.

இது மத்திய நரம்பு மண்டலத்தின் மீது செயல்படுகிறது. நாடி துடிப்பினை சரிபடுத்தி ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதய செயல் இழப்பின்போது இரத்த ஓட்டத்தினை சீர் செய்யும் வலுவேற்றியாக பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அதிர்ச்சி மற்றும் இதய செயலிழப்புகளில் கூடுதல் அளவு மருந்தாக ஊசி மூலம் செலுத்தப்பட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. தண்டுவடத்தின் நரம்பு மையங்களை தூண்டும் தன்மை பெற்றுள்ளதால் வலிப்பு ஏற்படுகிறது. புருசைன் ஆல்கலாய்டு வலிப்பு அசைவுகளை தோற்றுவிப்பதில்லை. இது அரிப்பு மற்றும் புறச்செவியின் வீக்கத்தின் வலி போக்கும். கைகால் வலியை குணப்படுத்த உதவுகிறது.

வெப்பக்கொப்புளம் குணமாகும்

எட்டி இலையை தவறாக உட்கொண்டவர்களுக்கு விஷ முறிவு மருந்தான நக்சுவாமிகா கொடுக்கப்படுகிறது. இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும். மரப்பட்டையை நெய்யில் காய்ச்சித் தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும். இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் கலந்து பூச கட்டிகள் கரையும் வெப்பக்கொப்புளம் குணமாகும்.

வேர் மிகவும் கசப்பானது. விட்டு விட்டு வரும் காய்ச்சல் மற்றும் விஷமுள்ள பூச்சி கடிக்கு மருந்தாகும். வேரின் கசாயம் அல்லது சாறு வலுவேற்றும் மருந்தாகவும் காய்ச்சல் தீர்க்கவும் பயன்படுகிறது. வேரானது பட்டை எலுமிச்சை சாறுடன் அரைக்கப்பட்டு மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இவை காலரா நோயினைக் குணப்படுத்தும்.