திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும். இது அகருமரம் என்றும் குறிக்கப்படுகின்றது. சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது; தமிழக மலைக்காடுகளில் தானே வளர்கின்றது. இதன் கட்டை மணமுடையது; சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கு
அகில் என்பது சந்தனக் கட்டைக்கு அடுத்து மருத்துவ உலகிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகும். பலவித நோய்களைக் குணப்படுத்தும் இயல்பு கொண்ட இது மிகவும் மலிவாகப் பெறக்கூடிய ஒன்றாகும். அகில் சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று. காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம்.
உடலில் வெப்ப உணர்வைத் தோற்றுவிப்பது இதன் இயல்பாகும். கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கிறது. உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் சக்தி பெற்றது அகில். அகில் மரத்தின் கட்டை மட்டும்தான் மருத்துவச் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.
ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, அருசி ஆகிய குறைபாடுகளை அகற்றும் ஆற்றல் பெற்றதாகத் திகழ்கிறது அகில். சரியானபடி மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். உடல் அயர்வினை உடனே போக்கும் இயல்பும் இதற்கு உண்டு.
அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவுக்கு மண் சட்டியில் போட்டு 30 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாகச் சுண்டக் காய்ந்ததும் வடிகட்டி ஆற வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு அவுண்ஸ் வீதம் காலை மாலை குடித்துவர உஷ்ணம் தொடர்பான வியாதிகளும், பித்தம் தொடர்பான பிணிகளும் விலகி நல்ல குணம் தெரியும். குறிப்பாக பித்தம் தொடர்பாக ஏற்படும் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி விட வேண்டும். சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும். வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும். சுவாசகோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் ரணங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் ரணம் வெகு விரைவில் குணமாகிவிடும்.
அகில் கட்டியை பசுவின் பால்விட்டு நன்றாக அரைக்க வேண்டும். சந்தனம் அரைப்பது போல அரைக்க வேண்டும். அரைத்த விழுதை உடல் சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் சருமத்தின் சுருக்கம் அகன்றுவிடும். ஊளைச்சதை எனப்படும், அதிக சதை போட்ட உடலைப் பெற்றவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வந்தால் சதை குறைந்து இறுகி உடல் நல்ல கட்டமைப்பாகக் காட்சியளிக்கும்.
அகில் கட்டியைக் கொண்டு ஒரு தைலம் தயாரிக்கலாம். இந்தத் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல பிணிகளை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்.
அகில் கட்டை வயோதிகர்களுடைய தளர்ந்த தேகத்தையும் இறுகச் செய்யும். இதன் வாசனையால் சிற்சில சுரம் நீங்கும். புகையால் வாந்தியும், பசியின்மையும், அழற்சியும் நீங்கும். அகில் கட்டை இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
அகில் கட்டை தைலம் தயாரிக்கும் முறை:
அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட துண்டுகளை 300 கிராம் அளவு சேகரித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும். தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டக் காய்ந்த பின்பு இறக்கி வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். அடுப்பிலிருக்கும் சாறு சுண்டும் நேரம் அதிமதுரம் 30 கிராம், தான்றிக்காய் 30 கிராம் தூள் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை பாதிக்கப்பட்ட உறுக்குகளின் உள்ளே விட்டு வரவேண்டும். மேற்பூச்சாகவும் தடவலாம். எண்ணெய்க் குளியல் போலவும் செய்து வரலாம்.
அகருக் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும். தளர்ந்த உடல் இறுகும்.
மேலும்,
அகிற்கட்டையை நீர் விட்டுச் சந்தனம் போலரைத்து, உடலில் பூசிக்கொண்டுவர, தளர்ந்த உடல் இறுகும்.
இதன் புகை மணத்தால் சிற்சில சுரவெப்பம் நீங்கும்.
அகில் கட்டையைப் புகைத்து முகரினும், அல்லது இக் கட்டையின் புகை மேல் படும்படி செய்யினும், அயர்ச்சி, வாந்தி, சுவையின்மை தீரும். இதைப் புண்களுக்கும் புகைக்கலாம்.
இக் கட்டையாலாக்கிய தூள் ஆண்மைப் பெருக்கத்துக்காக செய்யப்படும் சில மருந்துகளில் சேருகிறது.
அகிற்கட்டைத் தைலத்தை முடித்தைலமாகப் பயன்படுத்த, நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் நீங்கும்.
அகிற்கட்டைத் தைலம்:
அகிற்கட்டைக் குடிநீர், நல்லெண்ணெய், பசுவின்பால் வகைக்கு 1.3 லிட்டர் எடுத்து ஒன்று கூட்டி அத்துடன் அதிமதுரம், தான்றிக்காய்த்தோல் வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் தைலம் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ளவும்.
அகில் கட்டை தைலம் -1
அகில் கட்டையை சிறிது சிறிதாக நறுக்கி நீரில் போட்டு வற்றக் காய்ச்சி அதனுடன் நல்லெண்ணெய், பசுவின் பால் வகைக்கு 750 மி.லி. எடுத்து ஒன்றாக்கி வைத்துக்கொண்டு அதிமதுரம், தான்றிக்காய் தோடு வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து சேர்த்து லேசாக கொதிக்க வைத்து வடித்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.
· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.
· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.
· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.
· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும். வலி நீங்கும்.
· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.
· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.
· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும் பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும். உடல் பொலிவுபெறும்.
· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். வாந்தி சுவையின்மையைப் போக்கும்.
· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்.
2 கருத்துகள்:
மிக்க நன்று.
அருமை அருமை
கருத்துரையிடுக