COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

நாயுருவி

வேறு பெயர்கள் :- காஞ்சரி, கதிரி,மாமுநி, நாய்குருவி, அபாமார்க்கம் முதலியன.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தானே வளரும் செடி. தரிசு நிலங்கள் வேலியோரங்களில், காடு மலைகளில் தானே வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவமாக இருக்கும். இதன் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும், அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இதன் பூக்களில் பச்சை நிரமும் கலந்து காணப்படும். இதன் காய்களில் ஐந்து விதைகள் இருக்கும். விதை ஒட்டும் தன்மையுடையதால் விலங்குகள், மனிதர்களின் துணிகள் மீது ஒட்டிக்கொண்டு சென்று வேறு இடங்களில் விழுந்து முழைக்கும். எதிரடுக்கில் அமைந்த காம்புள்ள நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி. இவற்றின் தண்டும் இலையும் சிவந்து காணப்படும் வகை செந்நாயுருவி எனப்படும். செந்தாயுருவியே அதிக மருத்துவப்பயன் உடையது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும் இதற்குண்டு. புதன் மூலிகை என்பர். அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். செந்நாயுருவியே தெய்வீக ஆற்றல் பெற்றது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

நாயுருவி சிறுநீர் பெருக்குதல், நோய்நீக்கி உடல் தேற்றுதல். சதை நரம்பு இவற்றைச் சுருங்கச் செய்தல் ஆகியவை இதன் பொது மருத்துவ கணங்களாகும்.

நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும்.

நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

கதிர்விடாத இதன் இலையை இடித்துச் சாறு பிழிந்து சம அளவில் நீர் கலந்து காய்ச்சி நாளும் மூன்று வேளை 3 மி.லி. அளவு 5-6 நாள் சாப்பிட்டு பால் அருந்தவும். இதனால் தடைபட்ட சிறுநீர் கழியும். சிறுநீரகம் நன்கு செயல்படும். சிறுநீர்த் தாரை எரிச்சல் இருக்காது. சூதகக்கட்டு-மாதவிலக்கு தடைபடுவது நீங்கும். பித்த பாண்டு, உடம்பில் நீர் கோத்தல், ஊதுகாமாலை, குருதி மூலம் ஆகியன குணமாகும்.

இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

ஆறாத புண்-ராஜ பிளவை, விடக்கடி ஆகியவற்றிக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வர குணமாகும்.

இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து சமைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர நுரையீரல் பற்றிய சளி, இருமல் குணமாகும்.

செந்நாயுருவி
விட்டுவிட்டு வரும் சுரத்திற்கு நாயுருவி இலைகளுடன் மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி, உலர்த்திக் கொடுக்கக்குணமாகும்.

மூல நோய்க்கு நாயுருவி இலைக் கொழுந்தைப் பறித்து அதனுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து மூலத்தில் வைத்துக் கட்டி வர இதம் தரும்.

இதன் இலைச்சாறு 100 மி.லி.+100 மி.லி.எள் நெய் சேர்த்துக் காய்ச்சி சாறு சுண்டியவுடன் வடித்து வைக்கவும். காதில் வலி, எழுச்சி, புண், செவிடு ஆகியன குணமாக இதனைச் சொட்டு மருந்தாக இரு வேளை காதில் விடவும். மூக்கில் சளி, புண்ணுக்கும் இச்சொட்டு மருந்தினைப் பயன் படுத்தலாம்.

இதன் இலைச் சாறு பிழிந்து 30-50 மி.லி.அளவு குடித்து 7 நாள் உப்பில்லாப் பத்தியம் இருக்க வெறி நாய்கடி, பாம்புக்கடி விடம் தீரும். அரைத்துக் கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

இதன் இலையுடன் சம அளவில் துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு இருவேளை கொடுக்க வண்டு, பிற பூச்சிக்கடி குணமாகும்.

நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை குடிநீரிட்டு அருந்தி வந்தால் பேதியாகும்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.

விதையைச் சோறு போல் சமைத்து உண்ணப் பசி இராது. ஒரு வாரம் ஆயாசமின்றி இருக்கலாம். மிளகு, சீரகம் வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்கப் பசி உண்டாகும்.

நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, புலால் கூடாது.

நாயுருவிச் சாம்பல், ஆண் பனை பூ பாளை சாம்பல் சம அளவு சேர்த்து நல்ல நீர் விட்டுக் கரைத்து 1 பொழுது ஓய்வாய் வைத்திருக்க நீர் தெளிந்திருக்கும். அதை அடுப்பேற்றிக் காய்ச்ச உப்பு கிடைக்கும். இவ்வுப்பில் 2 அரிசி எடை தேன், நெய், மோர், வெண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி, நீரேற்றம், குன்மம், பித்தப்பாண்டு, ஆஸ்துமா ஆகியவை தீரும். தூதுவேளை, கண்டங்கத்திரி, ஆடாதொடை இவற்றின் குடிநீர்களை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

இதன் சாம்பலுடன் கடுகெண்ணையும் சிறிது உப்பும் சேர்த்துப் பல் துலக்கினால் பல் பலம் பெரும் வலியிருந்தால் குறையும். இதன் சாம்பலில் பொட்டாஸ் உள்ளதால் இதை அழுக்குத் துணி துவைக்கப் பயன் படுத்திவர்.

இதனை எரித்த சாம்பல் 5 கிராம் தேனில் காலை கொடுக்க மாத விலக்குத்தடை நீங்கும் விலக்காகும்.

இதன் இலைச்சாற்றில் ஏழுமுறை துணியைத் தோய்த்து உலர்த்தி திரி சுற்றி விளக்குத்திரியாகப் போட்டு நெய் தடவி எரியும் புகையை அதில் படிய பிடிக்கவும், புகைக் கரியை ஆமணக்கு நெய் விட்டு மத்தித்து கண்ணில் தீட்ட கண் பார்வைக் கோளாறு தீரும். குளிர்ச்சி தரும்.

வயிற்றுவலி, அஜீரணம், புளித்த ஏப்பம், உடல் வீக்கம் உடையவர்கள் நாயுருவி வேரைக் காசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

சிறுநீர் அடைப்பு உள்ளவர்கள் நாயுருவி சமூலத்தைக் குடிநீரிட்டு 60 மி.லி. முதல் 120 மி.லி. வீதம் அருந்தி வர சிறுநீரைப் பெருக்கும்.
மலச்சிக்கல், பசியின்மை, செரிக்காமை (அசீரணம், அறாமை) போன்றவற்றுக்கு மருந்தாகிறது 
பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், மூலம், இருமல், தோல் அரிப்பு, உடற் சுறுசுறுப்புக் குறைதல், தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. 
தேள் கடியினாற் பாதிக்கப்பட்டோரைக் குணமாக்க நாயுருவியின் இலைச் சாறு பயன்படுகிறது.

காதுவலி, பல்வலி, சிறுநீரடைப்பு போன்றவற்றுக்கான மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பற்களைப் பாதுகாத்து பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி என்னும் அற்புத மூலிகை ஆகும்.

நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக்கொள்ளலாம்.

நாயுருவிச்செடியினால் பல் துலக்கமுக வசீகரம் பெறும். நாயுருவி பற்பொடி செய்யவும் பயன் படுகிறது .பல் போடி செய்யும் முறை 

நாயுருவி வேர் - 100 கிராம் 
கடுக்காய் - 50 கிராம் 
நெல்லிக்காய் - 50 கிராம்  
தான்றிக்காய் - 50 கிராம் 
ஏல அரிசி - 20 கிராம் 
கிராம்பு - 50 கிராம் 
சுக்கு - 50கிராம் 
கருவேலப்பட்டை - 50கிராம் 
இந்துப்பு - 50 கிராம்

உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதைக்கொண்டு தினமும் இரு முறை பல் துலக்கி வர பல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் பற்கள் பளபளவென மின்னும். 
இன்னொரு விந்தையான குணம் நாயுருவிக்கு உண்டு .இதை சித்தர்கள் ரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்தனர் .

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது .எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும் .
நாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல், பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும்.
நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில் தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும். நாயுருவி விதையை 10 கிராம் எடுத்து அரைத்து 2 வேளை 2 நாட்கள் சாப்பிட்டு வர பேதி நிற்கும்.

நாயுருவி விதையை நிழலில் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 20 கிராம் எடுத்து, துத்திக் கீரையை வதக்கும் போது சேர்த்து உணவுடன் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். நாயுருவி விதையைச் சோறு போல சமைத்து உண்ண பசி எடுக்காது. ஒரு வாரம் ஆயாசம் இல்லாமல் இருக்கலாம். பின்னர் மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிக் குடிக்க பசி உண்டாகும்.

நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கப் பல் தூய்மையாகி முகம் வசீகரம் ஆகும். நாயுருவி சமூலமும், வாழைச் சருகும், மூங்கில் குருத்தும் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 400 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 200 மில்லியளவு 2 வேளை குடிக்க, பெண்களின் வயிற்றிலுள்ள அழுத்தத்தை வெளியேற்றும். நாவறட்சி நீங்கும்.

நவ கிரகத்தில் நாயுருவி புதன் கிரகத்தை குறிக்கும்   புதன் கிரகத்திற்குக் கோவில் ஒன்று அமைத்து பகவானுடன், ஞானாதேவி, நாயுருவி செடி, இம்மூன்றையும் ஒரே சமயத்தில் வணங்குகின்றார்கள். இதனால் இக்கிரகத்தின் நன்மைகள் கிடைக்கும் என்றும், உயிரைக் குடிக்கும் நோய்களான கிட்னி ஃபெயிலியர், எய்ட்ஸ் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகில் உள்ள விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் புதன் பகவானுடன், ஞானாதேவி அம்மன் மற்றும் நாயுருவி செடியைச் சேர்த்து ஒரே சமயத்தில் காலை, மாலை இரண்டு வேளைகள் பூஜை செய்யப்படுகின்றன. புதன் பகவான் கோவில் இங்கு தனியாக அமைந்திருக்கிறது.
விதையை சாப்பிட்டால் ஒரு வாரம்வரை பசி இருக்காது. மீண்டும் பசி எடுக்க, சிறிதளவு மிளகு எடுத்து அதை வறுத்து இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்.

 20 கிராம் விதையை பவுடராக்கி துத்திக் கீரையில் கொதிக்க வைத்து காலை உணவில் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூலம் குணம் பெறும்.

10 கிராம் விதையை அரைத்து இரண்டு வேளை சாப்பிட்டால் பேதி குணம் பெறும். சிவப்பு, வெள்ளை நிறம் இரண்டு வகை நாயுருவி இருக்கின்றன. இரண்டும் பயன்படுத்தலாம்.

முசுமுசுக்கை

முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை  அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இது நுரையீரல் நோய்கள், சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.

அமைதியின்மை போக்கும்

இக்கீரையை நன்றாக ஆய்ந்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மாவாக அரைத்து தோசை, அப்பம் சுட்டு சாப்பிடலாம். இதனை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொள்ள நாள்பட்ட நோய்களால் தளர்ந்து போன உடல் பலமடையும்,
மனதில் அமைதியின்மை, கோபம் ஆகியவற்றையும் சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை கீரை.  உயர் ரத்த அழுத்த நோயினை இது குணப்படுத்த வல்லது.சளி, இருமல் வரட்டு இருமல், இழுப்பு வலிகள் போன்றவற்றையும் ஒழித்துக் கட்டும்.
ஆஸ்துமா குணமாகும்
முசுமுசுக்கையை சூரணமாக செய்து உட்கொள்ள நாள்பட்ட எலுப்புருக்கி, ஆஸ்துமா, காசநோய், இளைப்பு நோய், ரத்தசுவாசநோய் போன்றவை குணமடையும்.
முசுமுசுக்கை தைலம்
முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

மூச்சிரைப்பு குறைய
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும்.

இருமல் குணமாக
முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

மருதாணி


மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் பெண்களுக்கு கிடைகின்றன.மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும்.. இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை பயனுள்ளவை.


தேமல் போக்கும் மருதாணி
இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும். பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும். 

கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக போடலாம். தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும். இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும். கால் எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும். மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.

உடல் வெப்பம் தணியும்

மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்துள்ளது. மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை .

மருதாணி இலையை அரைக்கும் போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம் நன்கு ஏற உதவும். விரல்களை நன்கு சுத்தம் செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய ஆரம்பிக்க வேண்டும். இது நகத்தில் சிவப்பு நன்கு ஏற உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க பயன்படும். 

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

வாய்ப் புண், அம்மை நோய்

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம். 

இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். 

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

தூக்கமின்மையை போக்கும்

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.
மருதாணியை தலை‌யி‌ல் தே‌ய்‌‌த்து ஊற வை‌த்த ‌பி‌ன் ஷாம்பூ போடுவது தவறு. ஏனெனில் மருதாணி ஒரு கன்டிஷனர், ஆகவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது சிறந்ததல்ல.

எனவே, மு‌ந்தைய நா‌ள் ஷா‌ம்பு போ‌ட்டு கு‌ளி‌த்து ‌முடியை ந‌ன்கு காய வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அடு‌த்த நா‌ள் தலை‌க்கு மருதா‌ணி போ‌ட்டு ஊற வை‌த்து‌வி‌ட்டு வெறுமனே அல‌சி‌விடலா‌ம்.இதன் கஷாயம் வறண்ட தொண்டைக்கு தொண்டை கழுவி நீர்மமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் இலைப்பசை தலைவலி, கால் எரிச்சல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. இலைகள் நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கெதிராகவும் பயன்படுகிறது. விதைகளும் வேர்ப்பட்டைகளும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

பண்டைய எகிப்தில் சடலங்கள் மருதாணி சாயத்தில் தோய்த்தெடுத்த துணிகளில் பாதுகாக்கப்பட்டன. அரேபியா மற்றும் இந்தியாவில் கைகளில் அழகிய நிற வேலைப்பாடு செய்ய இந்த சாயம் பயன்பட்டது.

மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும்.

இலையுடன், படிகாரமும் சேர்த்து அரைத்து அதன் விழுதை, கருந்தேமல், படைகள், கால்வலி, நரம்பு இழுப்பு உள்ளவர்கள் தேய்த்து வர இந்நோய்கள் நீங்கும். இலையை உள்ளங்காலில் தேய்த்தால் கண் எரிச்சல் நீங்கும். இலையின் விழுதை தலையின் இருபுறமும் பக்கவாட்டில், நெற்றிப் பொட்டின் பற்றுப்போட தலைவலி குணமாகும்.

அம்மை போட்ட காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கும் நேரிடாதவாறு பாதுகாக்க இலையை அரைத்து இருகாலடிகளில் வைத்துக் கட்டலாம். நகங்களுக்கு வைக்க நகம் யாதொரு நோய்க்கும் உட்படாமல் தடுக்கப்படும். பூவினை தலையில் சூட உடல் வெப்பம் மாறும். விதைச் சாற்றில் தாளகத்தை இழைத்து மெல்லியதாக வெண்குட்டத்தின் மீது பூசிவர நிறம் மாறும்.

கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும்.

மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.
இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

இலைகளின் இளஞ்சிவப்பு நிறச்சாயம் உள்ளங்கைகள், நகங்கள், பாதங்கள் மற்றும் கேசத்திற்கு நிறங்கொடுக்கும் பொருளாகவும், துணிச்சாயமாகவும் உபயோகிக்கப்படுகிறது. நறுமணப் பொருட்கள் சேர்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது.

விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று என்ற கொடுமையான வலி நோய் தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காயெண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்.

தலை கழுவியாகவும் செயல்பட்டு கூந்தலின் செழுமையான கேச வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. மருதாணிப் பூவை அரைத்து தொழுநோய் புண்களுக்குப் பற்றிடலாம்.

கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.

கை, கால் அரிப்பு 

கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதோன்றி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும். 

நகச்சுத்தி 

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ் என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதோன்றி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது. 

நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதோன்றி விளங்குகிறது. 

நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும். 

மேக நோய்கள் நீங்க 

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதோன்றி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது. 

சுளுக்கு நீங்க 

மருதோன்றி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும். 

நல்ல தூக்கம் பெற 

மருதோன்றியின் பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும். 

மருதோன்றியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும். 

வசம்பு



வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. இதன் பிறப்பிடம் தென் கிழக்கு அமரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேராளாவிலும் அதிகமாக வளர்கிறது. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை. இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது. நட்ட ஒரு ஆண்டில் பயிர் மூதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அதாவது ஒரு ஆண்டில் கிழங்கை வெட்டி எடுக்க வேண்டும். இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறுது.


மருத்துவப்பயன்கள்-வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.


நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு வசம்பை காசிக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றிட்டு வர குணமாகும்.


வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.


வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.


வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.


வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.


வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.


குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம் சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.


வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.


பசியைத் தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், முறைக் காச்சலுக்கும் இதனை கொடுக்கலாம்.


வயிறில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூசவேண்டும்.


சகலவித விஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.


வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்த்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சம அளவு இடித்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை கொடுத்துவர வயிற்றுவலி, மூர்ச்சை, காய்சலுக்குப் பின் உண்டாகும் பலக்குறைவு, பயித்தியம், காக்காய்வலிப்பு ஆகியவை தீரும்.


வசம்பு என்ற மூலிகை ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்படக்கூடியது. இதற்கு ஆங்கிலத்தில் Sweet Flag என்று சொல்வார்கள். எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பாட்டி வைத்தியத்தில் இந்த வசம்பை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள். இதற்கு 'பிள்ளை வளர்ப்பான்' என்ற பெயரும் சில கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. எனக்கு தெரிந்த அதன் பலன்கள் உங்களுக்காக: 1. காய்ந்த வசம்பை பொடி பண்ணி அதிலிருந்து 1/2 ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் பசியின்மையோ, சிறு சிறு தொற்று நோய்களோ வராது. 6 மாதத்திற்குட்பட்ட வயதுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு சிட்டிகை வசம்பு பொடி போதுமானது. 2. தொற்று நோய் அண்டாமல் இருக்க வசம்பை சிறிய மணி அளவில் பொடிதாக நறுக்கி நூலில் கோர்த்து (தேவைப்பட்டால் அழகுக்கு இடையிடையே கறுப்பு, வெள்ளை மணிகள் கோர்த்து) பிள்ளையின் கைகளில் வளையமாக கட்டிவைப்பார்கள். 3. வசம்பை தூள் செய்து 2 ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஜீரணம் கொடுக்கக் கூடியதாகவும் பலவித தொற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் அமையும். 4. வயிற்றுவலியால் தொடர்ந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு மருந்து உரைக்கும் கல்லில் வைத்து தேய்த்து பவுடராக்கி, 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் குழைத்து, குழந்தையின் தொப்புளை சுற்றி பற்று போட்டால் நல்ல பலன் கிடைக்கும். 5. விஷத்தன்மை கலந்துவிட்ட உணவை யாரும் சாப்பிட்டுவிட்டாலோ அல்லது விஷத்தையே சாப்பிட்டிருந்தாலும் 2 அல்லது 3 டீஸ்பூன் பொடியாக்கிய வசம்பை தண்ணீரில் கரைத்து உடனே கொடுத்தால் விஷம் வெளியே வந்துவிடும் என்று சொல்வார்கள். 6. கால்நடைகளுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க வசம்பு தூளுடன் மஞ்சள்தூள் கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். 

வசம்பு – பூச்சிவிரட்டிவசம்பு 
என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும்.

காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 நாட்களுக்கு ஒரு முறை 10 கிலோ தூவினால் போதும். வீட்டுத்தோட்டங்கள், சிறிய செடிகள், பூந்தொட்டிகளுக்கு ஒரு கைபிடி (75-100 கிராம்) இலைப்பகுதி மற்றும் தண்டுப்பகுதிகளில் தூவலாம். பெரிய கொடிகள், மரங்களுக்கு 250 கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

மேலும் வீட்டு கழிப்பறை, குளியலறை, சமையல் அறைகளில் பூச்சியைக் கட்டுப்படுத்த இரவு 250 கிராம் தூவிவிட்டு காலையில் கழுவிவிட்டால் போதும்.வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். 

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

தூதுவளை


இறைவன் மனிதனுக்கு கொடுத்த ஒரு வரப்ரசாதம் இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை இது .வாரம் இருமுறை இதன் இலையை ஏடுத்து ரசம் , கஷாயம் , அல்லது சூப் வைத்து குடித்தால் தீராத சளி , இருமல், கொலைகள் அத்தனையும் விரட்டி அடித்துவிடும்.


தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.




தூதுவளை (Solanum trilobatum) மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.




தூதுவளைக் கற்பம்


தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.


தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.


தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.


வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.



தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.


தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.


காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.


மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.


தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.


தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.


தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.


தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.


தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.


மேற்கண்ட கற்ப முறைப்படி தூதுவளையை உண்டு வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.


தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.


தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.


தூதுவளையை பயன்படுத்தும் முறை


இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.


தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.


தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.


பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.


தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.




தூதுவேளை இலையில் ரசம் வைத்துச் சாப்பிடலாம். தூதுவேளை தோசை சாப்பிடலாம். தூதுவேளை கசாயம் குடிக்கலாம்.


தூதுவேளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

 பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும் , ஆண்மை பெருகும் வலிவு கிடைக்கும் 

காய் காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும்.அழற்சி தீரும் .வாயு தொந்த்தரவு தீரும். 

பழம் இது மார்பில் இறுகிய சளியை நீக்கும்.இருமல் மூன்று தோஷம் நீக்கும்.பாம்பின் நஞ்சு நீக்கும் .

எலுமிச்சை

புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.


எலுமிச்சை இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடது. எலி மிச்சம் வைத்ததாதல்தான் என்னவோ  இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்ததோ என்னவோ.,,,!


100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
 இதிலுள்ல அதிகமான வைட்டமின் சி சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்றவல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.
    எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.
   தலைச்சுற்றல் வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
    எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.
   கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.
   சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன. பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
   தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.
    பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.
   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி அடையும். மனஅழுத்தம், ஸ்டிரெஸ் நீங்கும்.
  உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
    இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது. காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.
   சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.
   தலையில் பொடுகுத் தொல்லை நீங்க,  எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும் நிற்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும்.

அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள், மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது.


எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.


எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.


எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.


உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.


இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெற‌லாம். சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்ட‌ழகு மேனி பெறும். கனிகளில் மதியூக மந்தி‌ரி குணத்தை உடையது எலுமிச்சை.

எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது  தேன் போன்றவற்றுடன் கலந்து அருந்தலாம்.
எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.